பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா

Update: 2023-01-16 16:40 GMT

திருப்பூர், ஜன.17-

திருப்பூரில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

பொங்கல் திருவிழா

திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியவை சார்பில் திருப்பூர் பொங்கல் திருவிழா யுனிவர்செல் தியேட்டர் அருகே நொய்யல் நதிக்கரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் சமத்துவ ெபாங்கலை யுனிவர்சல் பழனிசாமி, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) செயலாளர் கோவிந்தப்பன், கிட்ஸ் கிளப் கல்விக்குழும தலைவர் மோகன் கார்த்திக், டி.கே.டி. கல்விக்குழுமம் ஷகிலா பர்வீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் நிமிர்வு கலை குழுவின் பறை இசை கலை நிகழ்ச்சி நடந்தது.

"திறன்மிகு திருப்பூர்" இலச்சி

இந்த நிகழ்ச்சிக்கு எம்.பிக்கள் சுப்பராயன், நடராஜன், புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், எம்.எஸ்.எம்.ஆனந்தன், விஜயகுமார், மேயர் தினேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், 'நிட்மா' மற்றும் ஜீவநதி நொய்யல் சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, லைன்ஸ் மு.ஜீவானந்தம் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக "திறன்மிகு திருப்பூர்'' இலச்சினை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விழாவின் 2-வது நாளான நேற்று கரகாட்டம், காவடியாட்டம், கட்டைக்கால் ஆட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. குமார் ராமன் குழுவினரின் நாட்டுப்புற பாடல், கர்நாடக மலை மக்களின் கலையான டொல்குனிதா கலை நிகழ்ச்சி, பட்டாம்பூச்சி குழுவினரின் நாட்டுப்புற பாடல் நடைபெற்றது.

3 ஆயிரம் குடும்பங்கள்

நிகழ்ச்சியை பொதுமக்கள் காண்பதற்காக யுனிவர்சல் தியேட்டர் அருகே மேடை அமைக்கப்பட்டு, மேடையிலிருந்து ஸ்ரீசக்தி தியேட்டர் வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பொங்கல் விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது. மாநகராட்சி 60 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கும் 50 குடும்பங்கள் என இணைந்து 3 ஆயிரம் குடும்பங்கள் சீருடை வடிவில் புத்தாடை அணிந்து சமூக நல்லிணக்க பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இதையடுத்து கொங்கு பண்பாட்டு மையத்தின் பெருஞ்சலங்கையாட்டம், வள்ளிக்கும்மி ஆட்டம், செந்தமிழ் காவடியாட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு விகடகவி கலைக்குழுவினரின் கிராமிய நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்