தள்ளுவண்டி கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்

தர்மபுரி நகரில் தள்ளுவண்டி கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சிறு வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-07-11 15:28 GMT

தர்மபுரி நகரில் தள்ளுவண்டி கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சிறு வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 5 மற்றும் 6 ஆண்டுகள் கொண்ட ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பு உள்ள பத்திரங்களை நூற்றுக்கணக்கான மக்கள் வாங்கி உள்ளோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அலுவலகங்களை மூடி விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி நாங்கள் முதலீடு செய்த தொகையை பெற்று தர வேண்டும் என்று கோரியிருந்தனர்.

நடவடிக்கை

தர்மபுரியை சேர்ந்த தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் கொடுத்த மனுவில், நகரில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டி கடைகளை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நடத்தி வருகிறோம். நகராட்சிக்கு வரியும் செலுத்தி வருகிறோம். சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் என்று அலுவலர்கள் கூறுகிறார்கள். தள்ளுவண்டி கடைகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பாலக்கோடு அருகே உள்ள மல்லுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மல்லுப்பட்டியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான பஞ்சலோகம் மற்றும் வெள்ளியால் ஆன பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கரகம் மாயமாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி கரகத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்