பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றக்கோரி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது

பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றக்கோரி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-04 09:44 GMT

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலை மீது சுமார் ரூ.83 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருவழிப்பாதை கொண்ட இந்த மேம்பாலம், தாம்பரம்-விமான நிலையம் மார்க்கத்தில் ஒருவழிப்பாதை கொண்டதாக திறக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த ேமம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் மறைமலைஅடிகள் பள்ளிக்கு எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து இந்திரா காந்தி சாலைக்கு வாகனங்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்க கோரி கடந்த மார்ச் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன், மே மாதம் அந்த மேம்பாலத்தை ஆய்வு செய்தார். கிண்டி ஐ.ஐ.டி.க்கு எதிரே உள்ள மேம்பாலத்தை பயன்படுத்துவது போன்று, பாலத்தின் இரு முனைகளிலும் உள்ள தடுப்பு சுவரை உடைத்து நெரிசல் நேரங்களில் இரு வழிப்பாதையாக மாற்றவும், ஜி.எஸ்.டி.சாலை - இந்திரா காந்தி சாலை சந்திப்பில் உள்ள தடுப்புகளை அகற்றவும் அறிவுறுத்தினார்.

ஆனால் அமைச்சர் அறிவுறுத்தி 6 மாதங்களை கடந்தும் அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. சாலை - இந்திரா காந்தி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீசாருக்கு நெடுஞ்சாலைத்துறை பணம் கொடுத்துள்ளது. அதன்படி போலீசார் சிக்னலை அமைக்காமல் உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்தநிலையில் பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்கள் சங்கம், ரெயில் நிலைய ரோடு வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்லாவரம் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் மறைமலை அடிகள் பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதி செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன் காந்தி, ஜான்சி சிந்தன், ஹேமக்குமார் சந்திரன் உள்பட வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்