பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் சிக்கும் மீன்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம்

வாலிநோக்கம் கடல் பகுதியில் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் சிக்கும் மீன்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Update: 2023-04-01 18:45 GMT

சாயல்குடி,

வாலிநோக்கம் கடல் பகுதியில் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் சிக்கும் மீன்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கரைவலை மீன்பிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயமும், மீன்பிடி தொழிலும்தான் பிரதானம். தமிழகத்திலேயே அதிகமான மீன்பிடி படகுகளை கொண்டதும் ராமநாதபுரம் மாவட்டம்தான்.

இருந்தாலும் இந்த மாவட்டத்தில் இன்னும் பல ஊர்களில் பாரம்பரிய முறையில் கரை வலை மீன்பிடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்.

கடற்கரையோர கடலில் மீன்கள் அதிகம் உள்ள இடத்தை அறிந்து அந்த இடத்தில் கரைவலையை போட்டுவிட்டு பின்னர் அங்கிருந்து அந்த வலையை கடற்கரையின் இரண்டு புறங்களிலும் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நின்று, மீனவர்களுக்குரிய ராகத்துடன் பாடல்களை பாடியபடி கரைவலையை இழுத்து மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கடற்கரையில் நின்றபடி கரைவலையை இழுத்து, பலவகை மீன்களுடன் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். சீலா, மாவுலா, முரல், பாறை, சூடை உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்தன. அதுபோல் கரைவலை மீன்பிடிப்பில் சிக்கிய மீன்களை வாங்க சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆர்வம் காட்டினா்..

விசைப்படகுகளால் பாதிப்பு

இது பற்றி மீனவர் முனிசாமி கூறியதாவது:-

படகுகளில் பிடித்து வரக்கூடிய மீன்களை காட்டிலும் கரைவலை மீன்பிடிப்பில் சிக்கும் அனைத்து வகை மீன்களுமே அதிக ருசியாக இருக்கும். கரைவலை மீன்பிடிப்பில் எல்லா வகையான மீன்களும் கிடைக்கும். சீலாமீன் சீசன் முடிந்துவிட்டதால் அந்த வகை மீன்கள் வரத்து குறைந்துவிட்டது. கரைவலையில் மாவுலா, சூடை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் கிடைக்கும். கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஏராளமான விசைப்படகுகள் தொடர்ந்து இந்த பகுதியில் மீன்பிடித்து வருகின்றன. இதனால் கரைவலை சேதமாவது மட்டுமல்லாமல் எங்களின் மீன்பிடித்தொழிலும் பாதிக்கப்படுகிறது. எனவே கரையோர கடல் பகுதியில் விதிகளை மீறி மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்