தாரமங்கலம் ஏரி உபரிநீர் செல்ல நிரந்தர வழி ஏற்படுத்தப்படுமா? வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தாரமங்கலம் ஏரி உபரிநீர் செல்ல நிரந்தர வழி ஏற்படுத்தப்படுமா? என்று வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-10-12 21:01 GMT

தாரமங்கலம், 

தாரமங்கலம் ஏரி

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஏரியானது 54 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் நிரம்பியது. காவிரி உபரிநீர் திட்டத்தில் இது 10-வது ஏரியாகும். ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற அமைக்கப்பட்டு இருந்த பாதையை தற்போது காணவில்லை. காரணம், கடைகள், வீடுகள் ஆக்கிரமிப்பால் நீர்வழிப்பாதை மாயமானது. இதனால் ஏரி உபரிநீர் தாரமங்கலம் நகர்ப்பகுதியில் புகுந்து காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது.

இதனால் தாரமங்கலம் டவுன் பகுதியில் வசிக்கும் மக்கள், கடை வியாபாரிகள் கடும் அவதிக்கு ஆளாயினர். ஏரி உபரிநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்களும், வியாபாரிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

போராட்டம் நடத்தியவர்களை அழைத்து ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஏரி உபரிநீரை வெளியேற்ற நீர்வழிப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, ஏற்கனவே நீர்வழிப்பாதை இருந்த இடங்களில் தற்போது கட்டப்பட்டுள்ள கடைகள், வீட்டு உரிமையாளர்களை அழைத்து பேசியதுடன், நீர்வழிப்பாதை அமைப்பதற்கான கையெழுத்தையும் வாங்கினர்.

அதன்பிறகு மழையும் ஓய்ந்தது. உபரிநீர் வெளியேறவும் இல்லை. நீர்வழிப்பாதை அமைப்பதற்கான அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் வெள்ளம்

தற்போது கடந்த 2 நாட்களாக மழை பெய்ய தொடங்கியது. ஏற்கனவே முழுவதும் நிரம்பி இருந்த நிலையில் ஏரியில் இருந்து உபரிநீர் நேற்று முன்தினம் வெளியேறியது. தாரமங்கலம் பஜார் பகுதியில் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது.

ஒவ்வொருவரும் தங்களது கடைகள் முன்பு தண்ணீர் தேங்காத வகையில் பொக்லைன் எந்திரம் கொண்டு மண் அள்ளி வைக்கின்றனர். இதனால் பஜார் பகுதி எங்கும் தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ேவண்டும். அதாவது, தாரமங்கலம் ஏரி உபரிநீர் செல்ல நிரந்தர வழிப்பாதை அமைக்க வேண்டும் என்பதே வியாபாரிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்