பிளாஸ்டிக் குடோனில் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த வியாபாரி சாவு
பிளாஸ்டிக் குடோனில் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த வியாபாரி உயிரிழந்தார்.;
சேலம்,
சேலம் பள்ளப்பட்டி உடையார் காலனியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55). வியாபாரியான இவர், அப்பகுதியில் பிளாஸ்டிக் குடோன் வைத்து நடத்தி வந்தார். அந்த குடோனில் மேற்கூரை பழுதடைந்து இருந்ததால் அவற்றை மாற்றி அமைக்க முடிவு செய்திருந்தார். இதற்காக நேற்று மாலை நாகராஜன் மற்றும் அவரது குடோனில் வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்பாபு (25) ஆகியோரும் 20 அடி உயரத்தில் ஏறி மேற்கூரையை (ஆஸ்பெட்டாஸ் சீட்) மாற்றிவிட்டு புதிய மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கூரை திடீரென உடைந்ததால் 20 அடி உயரத்தில் இருந்து நாகராஜன், ராஜ்பாபு ஆகிய 2 பேரும் கீழே விழுந்தனர். இதனால் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த நாகராஜன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம், தனியார் ஆஸ்பத்திரியில் ராஜ்பாபுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.