1½ கிலோ தங்க நகைகளுடன் வியாபாரி அதிரடி கைது

கடையநல்லூரில் 1½ கிலோ தங்க நகைகளுடன் வியாபாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-11 18:45 GMT

கடையநல்லூர்:

நெல்லை தச்சநல்லூர் நல்லமேய்ப்பன்நகர் துர்கா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கச்செல்வம் (வயது 45). இவர் நகைக்கடைகளுக்கு தங்க நகைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து கடந்த வாரம் வங்கி மூலம் ரூ.58 லட்சம் பெற்றுக்கொண்டு ஒரு கிலோ 132 கிராம் தங்க கட்டிகளை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கடையநல்லூர் சந்தை தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் மக்தும் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனு மீது கடையநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை போலீசார் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கடையநல்லூரில் உள்ள நகைக்கடையில் பணம் பெற்றுக்கொண்டு நகை கொடுக்காமல் ேமாசடி செய்த தங்கச்செல்வம் என்பது தெரியவந்தது. மேலும் அவரது காரில் ஒரு கிலோ 523 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ 966 கிராம் வெள்ளி நகைகள், ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தங்கச்செல்வத்தை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவரிடம் இருந்த தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப்பணத்ைத காருடன் பறிமுதல் செய்தனர். இதுதவிர மற்ெறாரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது:-

நகை வியாபாரி தங்கச்செல்வம் பல ஆண்டுகளாக கடையநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நகை வியாபாரிகளுக்கு மொத்தமாக தங்க, வெள்ளி கட்டிகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவரது தொழிலில் நஷ்டம் ஏற்படவே பணத்தை பெற்றவர்களுக்கு நகையை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசியாக கடையநல்லூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.58 லட்சம் பெற்றுக்கொண்டு அதற்கான நகையை கொடுக்க முடியாமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தங்கச்செல்வத்தை கைது செய்து, நகைகள், பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.

கைதான தங்கச்செல்வம் நெல்லையில் உள்ள ஒரு நகைக்கடையின் உரிமையாளர் சையது காதரிடம் ரூ.68 லட்சம் பெற்றுக் கொண்டு தங்க கட்டிகள் கொடுக்காமல் மோசடி செய்ததாக, நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இதேபோல் சங்கரன்கோவிலில் ராதாகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் அவர் மீது ஒரு வழக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்