ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
கூடலூர் ஊசிமலை காட்சி முனையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் பாறை மீது ஏறுகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் ஊசிமலை காட்சி முனையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் பாறை மீது ஏறுகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங்மட்டம், பைக்காரா, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இதேபோல் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்கின்றனர். அப்போது கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை காட்சி முனைப்பகுதிக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். இங்கு ஆபத்தான இடங்களும் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கவனத்தில் கொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
ஆபத்தை உணராமல்...
இதில் காட்சி முனை கோபுர கட்டிடத்தின் அருகே பள்ளத்தாக்குகளில் உள்ள பாறைகளில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் ஏறி செல்பி எடுப்பதோடு, ஜாலியாக அமர்ந்து பேசி வருகின்றனர். இதேபோல் ஆபத்தான பாறைகள் மீது ஏறி நின்று விளையாடுகின்றனர். இதனால் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. வெளியிடங்களில் இருந்து சுற்றுலா வருவதால் இப்பகுதியில் உள்ள ஆபத்தை அவர்கள் அறிவதில்லை.
இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஊசிமலை காட்சி மலைப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் ஜூன் முதல் வாரம் வரை வருகை தருவார்கள். எனவே, ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.