குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. அவர்கள் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து அருவிகளில் குளித்தனர்.;
குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. கடந்த 4 நாட்களாக சாரல் மழை பெய்யவில்லை. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.
குற்றாலம் அருவிகளில் நேற்றும் தண்ணீர் நன்றாக விழுந்தது. குளிர்ந்த காற்று வீசியது. வெயில் அடித்தது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். சுமார் 1 மணி நேரம் வரை காத்திருந்து அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.