செஞ்சி கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு செஞ்சி கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள வரலாற்று சின்னங்களை பார்த்து ரசித்தனர்.

Update: 2023-01-17 18:45 GMT

செஞ்சி, 

தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதியும், விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாட்டு பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா தலங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர். அதன்படி செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செஞ்சி ராஜாதேசிங்கு ஆட்சி புரிந்த 700 ஆண்டு பழமை வாய்ந்த செஞ்சி கோட்டையில் குவிந்தனர்.

வரலாற்று சின்னங்கள்

இவர்கள் உற்சாகமாக ராஜாகிரி கோட்டையில் உள்ள சிவன்கோவில் பூங்கா, நெற்களஞ்சியம், குதிரைலாயம், செஞ்சி கோட்டை உச்சியில் உள்ள பீரங்கிகள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் தின்பண்டங்களை குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இளைஞர்கள் பலர் அங்குள்ள ஆலமரத்தின் விழுதுகளை பிடித்து உற்சாகமாக ஊஞ்சல் ஆடுவது போல் ஆடினர். செஞ்சிக்கோட்டை பாதுகாப்பு அலுவலர் நவீன் தலைமையில் கோட்டை அலுவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதில் மதுபாட்டில்களை உள்ளே கொண்டு செல்வதை தடுக்க பலத்த சோதனைக்கு பின்பே சுற்றுலா பயணிகள் கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க. செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையின் அதிகரிப்பால் செஞ்சி கோட்டை நேற்று களைகட்டி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்