வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் உள்ள குணா குகையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல்,
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று வார விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலுக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
இதனிடையே சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' என்ற மலையாள திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த திரைப்படத்தை பார்த்த பலரும் குணா குகையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.