குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.;
குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
ஆனந்த குளியல்
குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. நேற்று சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். இதனால் போலீசார் அவர்களை வரிசையில் நின்று குளிக்கச் செய்தனர். நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர். ஆண்களை விட பெண்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்திருந்தனர். இதனால் அங்குள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் பெரும்பாலான அறைகள் நிரம்பி இருந்தன.
வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டதால் குற்றாலத்தில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.