ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-12-25 22:03 GMT

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அதிகளவில் வருவார்கள். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டை யொட்டியும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் நேற்று ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். கடும் பனி மூட்டத்தை சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். இந்த நிலையில் திடீரென்று மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். மழை காரணமாக படகு குழாமில், பிற்பகல் 3 மணியில் இருந்து படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தங்கும் விடுதிகள்

மேலும் மழைதொடர்ந்து நீடித்ததால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க முடியாமல் திரும்பி சென்ற வண்ணம் இருந்தனர். வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலை உள்ளது. மேலும் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மழைக்காரணமாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

மேலும் படகு இல்ல சாலை, லேடிஸ் சீட் சாலை, அண்ணா சாலை, சேர்வராயன் கோவில் சாலை ஆகிய பிரதான சாலைகளில் சுற்றுலா பயணிகள் வாகனங்களின் அணிவகுப்பால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பூலாம்பட்டி

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை தினத்தை ஒட்டி எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரிகதவணை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட நேற்று அதிகளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்குள்ள நீர் மின் உற்பத்தி நிலையம், அணைப்பாலம், நீர் உந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். மேலும் காவிரி படித்துறை, படகு துறை, காவிரித்தாய் சன்னதி, பிரமாண்ட நந்திகேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் வந்து சுற்றிப்பார்த்ததுடன், சாமி தரிசனமும் செய்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நேற்றுஅப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்