மாமல்லபுரம் கடற்கரை கோவிலை ஜொலிக்கும் வெளிச்சத்தில் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை இரவு நேரத்தில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து நேற்று ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

Update: 2023-07-16 08:32 GMT

இரவு 9 மணி வரை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இந்த பாரம்பரிய நினைவு சின்னங்களை கண்களிக்க நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களை காண காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் சிற்பங்களை காண பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்ததனர்.

எனவே இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறை ஆலோசித்து வந்தது. இந்நிலையில் பார்வையாளர்களை இரவு நேரம் அனுமதிக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.

முதல் முறையாக...

நேற்று முதல், முறையாக மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மட்டும் இரவு 9 மணி வரை கண்டுகளிக்க இரவு நேர அனுமதி தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் பலர் ரூ.40-க்கு நுழைவு சீட்டு வாங்கி ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கண்டுகளித்து ரசித்தனர். அதேபோல் வெளிநாட்டு பயணிகள் ரூ.600-க்கு நுழைவு சீட்டு எடுத்து பார்வையிட்டனர். நேற்று வந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் குளிர்ந்த கடல் காற்று, மின் விளக்கு வெளிச்சத்தில் மிளிர்ந்த கடற்கரை கோவில் புராதன சின்னம் முன்பு புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதல் கட்டமாக கடற்கரை கோவிலுக்கு மட்டும் இரவு நேர அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், மலைக்குன்றுடன் பரந்து விரிந்த வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் போன்ற புராதன சின்னங்களை பார்க்க இரவு நேர அனுமதி வழங்கப்படவில்லை என மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்