தொடர் விடுமுறை எதிரொலி; கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
புனித வெள்ளி உள்பட தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். குளு, குளு சீசனை அனுபவித்து மகிழ்ந்தனர்.
புனித வெள்ளி உள்பட தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். குளு, குளு சீசனை அனுபவித்து மகிழ்ந்தனர்.
குளு, குளு சீசன்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் குளு, குளு சீசன் நிலவும். இதையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள். அதன்படி, கொடைக்கானலில் இந்த ஆண்டிற்கான குளு, குளு சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தொடர் விடுமுறை
இந்தநிலையில் புனித வெள்ளி, வாரவிடுமுறை என தொடர் விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளா, ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.
அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் நகரின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஏரி பகுதி, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
உற்சாகம்
பின்னர் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணாகுகை, பில்லர்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். மேலும் பாம்பார் அருவி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.
அதேபோல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இதுதவிர பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.