படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பூங்காவில் படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.;
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை கவரும் வகையில் வைகை அணையின் இருகரைகளிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பகுதிகளில் பல்வேறு பொழுபோக்கு அம்சங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாகவே வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் காணப்பட்டது. வைகை அணையை சுற்றி பார்த்த அவர்கள் பூங்காவில் குவிந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பொழுதை களித்தனர். பூங்காவின் ஒரு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் படகுகள் இயக்கப்பட்டன. அதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். இதுதவிர சிறுவர்களுக்காக இயக்கப்படும் ெரயிலில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பயணம் செய்தனர். அதே நேரம் பூங்காக்களில் அமைக்கப்பட்டு இருந்த கண்கவர் சிலைகள், இருக்கைகள், வண்ண விளக்குகள் சேதமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.