குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-06-20 18:45 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாகவே தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அருவிகளில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

நேற்று காலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதை அறிந்த சுற்றுலா பயணிகள் நேற்று குடும்பத்தினருடன் குற்றாலத்திற்கு வந்தனர். கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றாலத்தில் சீசன் களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்