தொப்பூர் கணவாய் விபத்து: உயிரிழந்த 4 பேர் குறித்து உருக்கமான தகவல்கள்..
தொப்பூர் கணவாய் விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய கார் தீக்கிரையானது.
சென்னை,
கர்நாடக மாநிலம் சிந்தனூர் பகுதியில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி திருப்பூர் மாவட்டம் காங்கயத்திற்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியது.
2 கார்கள், பெயிண்டு பவுடர் ஏற்றி சென்ற லாரி, கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து இந்த லாரி மோதியது. இதில் பெயிண்டு பவுடர் ஏற்றி வந்த லாரி பாலத்தை உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது நெல் பாரம் ஏற்றி வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய காரும் தீக்கிரையானது.
காருக்குள் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் கோவையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியரான வினோத் (வயது 36), அவருடைய மனைவி ஜெனிபர் (29), குழந்தைகள் ஜெஸ்வின் (6), விஜயஷா (3), வினோத்தின் தம்பி விமல் (28), அவருடைய மனைவி அனுஷ்கா (23), இவர்களின் 4 மாத பெண் குழந்தை, வினோத்தின் சித்தி மஞ்சுளா (56) ஆகிய 8 பேர் என தெரியவந்தது.
அவர்களில் விமல், அவருடைய மனைவி அனுஷ்கா, மஞ்சுளா ஆகியோர் சம்பவ இடத்திலும், ஜெனிபர் ஆஸ்பத்திரியிலும் இறந்தது தெரிய வந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த வினோத், ஜெஸ்வின், விஜயஷா, விமலின் 4 மாத கைக்குழந்தை ஆகியோர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தில் காயம் அடைந்த லாரி டிரைவர்கள் ஸ்ரீதர் (26), ஸ்ரீகாந்த் (25), அனீஸ் (35) ஆகியோர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியிலும், சசிகுமார் (43) சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து கிடைத்த உருக்கமான தகவல்கள் வருமாறு:-
கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் உயிரிழந்த விமல் கோவையில் நகை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவி அனுஷ்கா பெங்களூரூவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அழைத்து வருவதற்காக விமலின் அண்ணன் வினோத் அவருடைய மனைவி ஜெனிபர், சித்தி மஞ்சுளா மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்து 8 பேரும் நேற்று முன்தினம் காரில் கோவைக்கு புறப்பட்டுள்ளனர். விமலுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்தநாள் என்று கூறப்படுகிறது. இதனால் பிறந்த நாளை கோவையில் கொண்டாடிவிட்டு பின்னர் அங்கிருந்து தங்கள் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் வரப்புகுறிச்சி கிராமத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் அங்கு உள்ள தேவாலயத்தில் விமலின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கோவைக்கு சென்று கொண்டு இருந்தபோது விபத்தில் சிக்கி கணவன், மனைவி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களும் தர்மபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 4 பேரின் உடல்கள் கோவை மற்றும் அரியலூர் பகுதியில் இருந்து வந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்தில் பலியானவர்களில் மஞ்சுளாவின் உடல் கோவைக்கும், மற்ற 3 பேரின் உடல்கள் அரியலூர் மாவட்டம் வரப்புகுறிச்சி கிராமத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.