தோணுகால் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்
தோணுகால் அரசு உயர்நிலைபள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.;
காரியாபட்டி,
தோணுகால் அரசு உயர்நிலைபள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
திறப்பு விழா
காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் தோணுகால் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை அமைச்சர் தங்கம் தென்னரசு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்கள் கேட்கின்ற உதவிகளை எல்லாம் செய்யக்கூடிய அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தோணுகால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இன்னும் சிறிது நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலையரங்க கட்டிடம்
பின்னர் கல்லுப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கலையரங்க கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
பின்னர் புதுப்பட்டியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கோவிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு சாமி தரிசனம் செய்தார். இந்தநிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசிதாஸ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தோணுகால் பாலமுருகன், அய்யம்மாள், பி.புதுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.