தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை

சேவூர் வாரச்சந்தையில் நேற்று தக்காளி வரத்து குறைந்து விட்டதால் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-06-26 16:33 GMT

தக்காளி

நாளுக்கு நாள் விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பிழைப்பு நடத்துவதே திண்டாட்டமாகி வருகிறது. ஒரு பக்கம் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மறுபக்கம் உணவுபொருட்கள், காய்களின் விலை மக்களை அச்சம் கொள்ள செய்கிறது. உணவு பொருட்கள், காய்கறி விலை உயர்வை கடந்து போக முடியாது. அவற்றை கட்டாயம் வாங்கி பயன்படுத்தியாக வேண்டும். அதனால்தான் சமையலுக்கு தக்காளி கட்டாயம் தேவைப்படுகிறது.

அந்த தக்காளி கை நிறைய பணம் கொண்டுபோய் பை நிறைய வாங்கி வந்த காலம் மாறி, இன்று பை நிறைய பணம் கொண்டு போய் கையில் வாங்கும் காலம் வந்து விட்டது.

கூலி கொடுக்க முடியாத நிலை

கடந்த மாதம் தக்காளியை பறிக்கும் தொழிலாளிக்கு கூட கூலிகொடுக்க முடியாத அளவுக்கு தக்காளி விலை இருந்த நிலை மாறி, இன்று தங்கம் போல் கிராம் கணக்கில் தக்காளி விற்பனை செய்யும் அளவுக்கு விலை சென்று விட்டது. இதனால் பெண்கள் சமையலில் தக்காளி சேர்ப்பதை கொஞ்ச நாட்களுக்கு தள்ளிவைத்து விட்டதாக கூறுகிறார்கள்.

ஓட்டல்களிலும் தக்காளி கூட்டு, தக்காளி ரசம் உள்ளிட்டவை வைப்பது இல்லை. காரணம் மாவட்டம் முழுவதும் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதே ஆகும். தொடர்ந்து பெய்த மழையால் தக்காளி வரத்து முற்றிலும் நின்று போனதாக கூறப்படுகிறது.

மழையால் வரத்து குறைவு

சேவூரில், திங்கட்கிழமையன்று வாரச்சந்தை கூடுகிறது. வாரச்சந்தையில் 800 கடைகளுக்கு மேல் செயல்படுகிறது. இங்கு சேவூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் விலை பொருட்களை அதிகாலையிலேயே கொண்டு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.

தக்காளி விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடர் மழையால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. மழையால் ஏராளமான தக்காளிகள் வீணாகியும், வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.30க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.80-க்கு விற்கப்படுகிறது என்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர் மழையால் செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருகின்றன. தக்காளி செடிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் செடியும் அழுகிவிட்டது. மழை குறைந்தால் தக்காளி வரத்து அதிகரிக்கும் என்றனர். தக்காளி விலை உயர்ந்து விட்டதால் ஒரு கிலோ, 2 கிலோ வாங்கும் பெண்கள், தற்போது அரை கிலோ தக்காளி மட்டும் வாங்கி செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்