தஞ்சையில் தக்காளி விலை சரிவு
தஞ்சையில் தக்காளி விலையில் சரிவு ஏற்பட்டதால் வீதி, வீதியாக லோடு வேன் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டதுடன் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது.
தஞ்சையில் தக்காளி விலையில் சரிவு ஏற்பட்டதால் வீதி, வீதியாக லோடு வேன் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டதுடன் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது.
உச்சத்தில் இருந்த தக்காளி விலை
அன்றாட சமையலில் தவிர்க்கவே முடியாத சில பொருட்களில் தக்காளியும் ஒன்று. பிரியாணி தொடங்கி சட்னி, சாம்பார், ரசம் வரை எல்லா அசைவ, சைவ உணவுகளில் கூடுதல் சுவை சேர்ப்பது தக்காளி தான். இத்தகைய தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. ஆனால் தக்காளி விலையேற்றம் இனி தக்காளி தேவைதானா என்றே பொதுமக்களை யோசிக்க வைத்தது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் இதைவிட அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி சமையலில் முக்கிய இடம் வகிப்பதால் எப்போதுமே மக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்வது வழக்கம்.
படிப்படியாக சரிவு
ஆனால் விலையேற்றம் காரணமாக ½ கிலோ, ¼ கிலோ அளவுக்கு தான் தக்காளியை வாங்கி சென்றனர். ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி மற்றும் காய்கறிகள் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலையும் படிப்படியாக சரிந்து வருகிறது.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனையானது. தக்காளி விலை குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். அதேபோல் மொத்த வியாபாரிகள் சிலர், பொள்ளாச்சியில் இருந்து மொத்தமாக தக்காளியை வாங்கி வந்து, லோடு வேன் மூலமாக வீதி, வீதியாகவும் சென்று தக்காளியை விற்பனை செய்தனர். தஞ்சை மேலவீதி, தெற்குவீதி உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் லோடு ஆட்டோக்களில் பெட்டி, பெட்டியாக தக்காளியை வைத்து கொண்டு 1½ கிலோ தக்காளி ரூ.100 என கூவி, கூவி விற்பனை செய்தனர்.
ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1½ கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் வந்து தக்காளியை வாங்கி சென்றனர். வரும் நாட்களில் இதைவிட தக்காளி விலை குறையும் என மொத்த வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.