பெரம்பலூரில் தக்காளி விலை சரிவு

பெரம்பலூரில் தக்காளி விலை சரிவடைந்தது. மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-06 18:30 GMT

தக்காளி விலை சரிவு

தக்காளி விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஏற்றத்துடனேயே இருந்தது. அதிலும் கடந்த 1-ந்தேதி பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கும், உழவர் சந்தையில் ரூ.160-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியும் விற்கப்பட்டது. இது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தக்காளி விலை சற்று குறைய தொடங்கியது.

நேற்று முன்தினம் தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது. நேற்று காலையில் மார்க்கெட்டில் திடீரென்று ரூ.40 குறைந்து ரூ.120-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி மாலையில் மேலும் ரூ.20 குறைந்து ரூ.100-க்கு விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் குறைய வாய்ப்பு

இதேபோல் நேற்று முன்தினம் உழவர் சந்தையில் ரூ.130-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று காலையில் ரூ.20 குறைந்து ரூ.110-க்கு விற்பனையானது. இன்று (திங்கட்கிழமை) உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு கீழ் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பெரம்பலூர் தினசாி காய்கறி மார்க்கெட்டுக்கும், உழவர் சந்தைக்கும் தக்காளி வரத்து ஓரளவுக்கு அதிகமாக இருப்பதால், அதன் விலை குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் தக்காளி விலை குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்று வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்