கோவிலுக்குள் குழந்தையிடம் நகை திருடிய பூசாரி கைது
கோவில்பட்டி அருகே கோவிலுக்குள் காதணி விழா நடந்த குழந்தையின் நகையை திருடிய பூசாரியை போலீசார் கைது ெசய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கோவிலுக்குள் காதணி விழா நடந்த குழந்தையின் நகையை திருடிய பூசாரியை போலீசார் கைது ெசய்தனர்.
குழந்தை நகை திருட்டு
கோவில்பட்டியை அடுத்துள்ள உருளைகுடி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை மனைவி முனீஸ்வரி (வயது 28). இவர் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வினை தீர்க்கும் அய்யனார் கோவிலில் தனது குழந்தைக்கு மொட்டை போட்டு, காது குத்துவதற்காக, கடந்த 12-ந்தேதி குடும்பத்தினர், உறவினர்களுடன் சென்றிருந்தாராம். காதணிவிழா நடைபெற்ற நிலையில், குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 3¼ பவுன் தங்கநகை திருடு போய்விட்டது.
இதுகுறித்து, முனீஸ்வரி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பூசாரி கைது
இந்த விசாரணையில் கோவில் பூசாரியான சுப்பிரமணியன்(வயது 61) குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரிய வந்தது. அவரிடமிருந்து 3¼ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, இதே போன்று கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அவர் வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா? என்பது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்குள் குழந்தையிடம் பூசாரி நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.