பேக்கரி கடை மேலாளரிடம் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல்; 4 பேர் கைது
ஆபாச படம் சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு பேக்கரி மேலாளரிடம் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹபீப் உசேன் (வயது 53). இவர் அப்பகுதியில் உள்ள பேக்கரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பரிதா பானு (46). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஹபீப் உசேன், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து ஹபீப் உசேனிடம் ஜீவானாம்சமாக ரூ.40 லட்சம் தருமாறு மனைவி பரிதா பானு, மூத்த மகன் அகமது சைபுல்லா ஆகியோர் கேட்டு வந்தனர்.
ஆபாசமாக சித்தரித்து...
இந்த நிலையில் மேலப்பாளையம் ஹாமீம்புரத்தைச் சேர்ந்த எஸ்.பி.மைதீன் (50), குத்துப் (45), முகமது ஹனிபா (46), அபுபக்கர் என்ற கோழி அலியார் (46) ஆகிய 4 பேரும் சேர்ந்து பரிதா பானுவிற்கு ஆதரவாக ரூ.40 லட்சம் கேட்டு ஹபீப் உசேனை மிரட்டினர். மேலும் ஹபீப் உசேனின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டும், அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியும் கடந்த 6 மாதங்களாக மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. .
இதுகுறித்து ஹபீப் உசேன் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், பரிதா பானு, அகமது சைபுல்லா, எஸ்.பி.மைதீன், குத்துப், முகமது ஹனிபா, அபுபக்கர் ஆகிய 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் எஸ்.பி.மைதீன், குத்துப், முகமது ஹனிபா, அபுபக்கர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
ரவுடி பட்டியல்
கைதான குத்துப், முகமது ஹனிபா, அபுபக்கர் ஆகிய 3 பேரும் கடந்த பல ஆண்டுகளாக ரவுடி பட்டியலில் இருப்பதும், அவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.