சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரிபொதுமக்கள் முற்றுகை போராட்டம்

போடியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-03 18:45 GMT

சுகாதார வளாகம்

போடி தீயணைப்பு துறை அலுவலகம் அருகே சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி, தீயணைப்பு துறை அலுவலகம் அருகே ஆண் மற்றும் பெண்களுக்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

வளாகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மேற்கூரைகள் இடிந்து கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீருக்காக மின்மோட்டாரை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.

முற்றுகை போராட்டம்

சுகாதார வளாகம் திறக்கப்படாமல் அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மின் கட்டணம் செலுத்தாததால் சுகாதார வளாகத்தை ஊழியர்கள் பூட்டி சென்றனர். இதனால் பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று சுகாதார வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும். தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். இரவுக்குள் பூட்டப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்