அரசு கேபிளில் தடையின்றி சிக்னல் வழங்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்;
அரசு கேபிளில் தடையின்றி சிக்னல் வழங்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒளிபரப்பு தடை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் கடந்த 4 நாட்களாக சிக்னல் கிடைக்காமல் ஒளிபரப்பு தடைபட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பிரச்சினை உள்ளதால் பொதுமக்கள் டி.வி. பார்க்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர்.
இல்லத்தரசிகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக டி.வி. இருப்பதால், கேபிள் ஒளிபரப்பு தடை காரணமாக அவர்கள் டி.வி. பார்க்க முடியாமல் மனஉளைச்சலில் இருக்கிறார்கள்.
சர்வதேச கால்பந்து போட்டி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை காண முடியாமல் இளைஞர்களும், தினசரி செய்தி சேனல்களை பார்க்க முடியாமல் மக்களும் தவித்து வருகின்றனர்.
'செட்டாப் பாக்ஸ்'களை முடக்கியது கிரிமினல் குற்றமாகும் என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், கேபிள் டி.வி. ஒளிபரப்பை சீரமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அருள்முருகன் தலைமை தாங்கினார். இதில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதையடுத்து அரசு கேபிள் டி.வி.யில் தடையின்றி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "கடந்த 19-ந் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 4 நாட்களாக அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்கள் செயல் இழந்து உள்ளன. இது கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், பொதுமக்களை அதிர்ச்சியும், வேதனையும் அடைய செய்துள்ளது. எனவே தடையின்றி சிக்னல் வழங்க ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.