சம்பளம் வழங்கக்கோரிஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

சம்பளம் வழங்கக்கோரி ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-13 18:45 GMT

பேரூராட்சி அலுவலகம்

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் குப்பைகள் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கும் பணிக்காக 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.609 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மாதம் தற்போது வரையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் சம்பளம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா

இதையடுத்து அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த மாதம் முதல் ஆன்லைன் மூலம் சம்பளம் வழங்க உள்ளதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரிரு நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த தூய்மை பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்