கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட 4 வேன்களில் சென்ற கிராம மக்கள்

பரமக்குடி அருகே குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட 4 வேன்களில் சென்ற கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2023-07-24 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடி அருகே குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட 4 வேன்களில் சென்ற கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

குடிநீர் பிரச்சினை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வெங்கட்டாங்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுப்புராயபுரம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதற்கு பல கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.

4 வேன்களில் சென்றனர்

அதன்படி அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் 4 வேன்களில் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த பரமக்குடி போலீசார் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் பரமக்குடி உதவி கலெக்டர் அப்தாப்ரசூல், தாசில்தார் ரவி மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கிராமத்திற்கு முறையாக தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்