ஆரல்வாய்மொழி பகுதியில் ஓணம் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் பூக்கள்

ஆரல்வாய்மொழி பகுதியில் ஓணம் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

Update: 2022-08-18 19:53 GMT

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி பகுதியில் ஓணம் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை என்றாலே அத்தப்பூ கோலம் தான் நினைவுக்கு வரும்.

இந்த பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி அதன் எல்லையோரத்தில் உள்ள தமிழகத்தின் குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கொண்டாடப்படும்.

வருகிற 31-ந் தேதி தொடங்கி நடைபெறும் இந்த பண்டிகை 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக அவரவர் வீட்டுவாசல் முன்பு பல வண்ணங்களினால் ஆன பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் போடுவார்கள். இதற்காக அதிகமான பூக்கள் தேவைப்படும்.

பூத்து குலுங்கும் பூக்கள்

குமரி மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற தோவாளை பூமார்க்கெட்டில் இருந்து தான் கேரள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வாங்கிச் செல்வார்கள். கடந்த 2 வருடங்களாக கொரேனா தொற்று காரணமாக அந்த அளவுக்கு பூ வியாபாரம் நடக்கவில்லை. ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லாததால் இந்த ஆண்டு சிறப்பான ஒரு பெரிய விற்பனையை விவசாயிகளும், வியாபாரிகளும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

மேலும் வியாபாரிகள் முன்கூட்டியே யார்? யாருக்கு? எவ்வளவு வேண்டும் என்பதை தோட்டத்திற்கு நேரடியாகவே சென்று விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட இந்த ஓணப்பண்டிகையையொட்டி சுமார் 200 டன் பூக்களுக்கு மேல் விற்பனை இருக்கும் என பூ வியாபாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். அதற்கு அச்சாரமிட்டது போல் அறுவடைக்கு தயாராகும் நிலையில் பூக்கள் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதியில் பூத்து குலுங்குவதை காணமுடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்