வேளாண் எந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் எந்திரங்கள்
வேளாண் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் வேளாண்மை எந்திர மயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 2022-23- ம் ஆண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண்மை எந்திர மயமாக்குதல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெற்று பயன்பெறும் வகையில் மொத்தம் 22 எந்திரங்கள், கருவிகளுக்கு ரூ.34.09 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானியம்
இந்தத் திட்டத்தில் பயன்பெறும் சிறு, குறு, இந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
விண்ணப்பம்
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் நிலத்திற்கான பட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகம் நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை பொறியியல் துறை உட்கோட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை வருவாய் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் டிராக்டர் வீதி என்.ஜி.ஓ. ஏ காலனி நெல்லை என்ற முகவரியிலும், சேரன்மாதேவி வருவாய் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் மிளகு பிள்ளையார் கோவில் தெரு பஸ் நிலையம் அருகில் சேரன்மாதேவி அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9952527623 மற்றும் 9600159870 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.