மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 25 ஆயிரம் சிறு-குறு தொழிற்சாலைகள் நாளை வேலை நிறுத்தம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 25 ஆயிரம் சிறு-குறு தொழிற்சாலைகள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.;
மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 25 ஆயிரம் சிறு-குறு தொழிற்சாலைகள் நாளை (திங்கட்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
மின்கட்டண உயர்வு
ஈரோடு மாவட்ட சிறுதொழில் சங்க (ஈடிசியா) அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக்கேயன், கோவிந்தராஜ் ஆகியோர் பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறு-குறு தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதால் கடந்த 12 மாதங்களாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மின்சார கட்டண உயர்வால் பிற மாநில உற்பத்தியுடன் எங்களால் போட்டியிட முடியவில்லை. இதனால் தொழில் நசியும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். கிலோ வாட் கட்டணத்தை ரூ.154 ஆக உயர்த்தி இருப்பதை திரும்ப பெற்று மீண்டும் ரூ.35 ஆக மாற்ற வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன.
போராட்டங்கள்
இவற்றை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து முதல்-அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடந்தது. அதற்கு பிறகு 16 மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரம் தொழில் முனைவோர்கள் விரைவு தபால் மூலம் எங்கள் கோரிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.
எனவே சிறு-குறு தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீதம் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். 'பீக் அவர்ஸ்' எனப்படும் பரபரப்பான நேர மின்சார கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மின்கட்டண முறையை மாற்ற வேண்டும்.
நாளை வேலை நிறுத்தம்
சூரியசக்தி மின்சார உற்பத்திக்கான 'நெட்வோர்க்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 'மல்டி இயர் டேரிப்' முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
எல்.டி. கட்டண முறையில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 37 ஆயிரம் சிறு-குறு நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.500 கோடி
இதில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் தொழிற்சாலைகள் பங்கேற்கும். இதனால் ரூ.500 கோடி வரை உற்பத்தி பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேட்டியின் போது ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஈடிசியா நிர்வாகிகள் திருமூர்த்தி, வெங்கடேசன், ராம்பிரபு ஆகியோர் இருந்தனர்.