ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டுவர பிரதமர் மோடி விரும்புவது ஏன்?

ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டுவர பிரதமர் மோடி விரும்புவது ஏன்? என்பது பற்றி ராஜபாளையத்தில் அண்ணாமலை விளக்கம் அளித்து பேசினார்.

Update: 2023-09-06 20:40 GMT

ராஜபாளையம், 

ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டுவர பிரதமர் மோடி விரும்புவது ஏன்? என்பது பற்றி ராஜபாளையத்தில் அண்ணாமலை விளக்கம் அளித்து பேசினார்.

சரித்திர வெற்றி

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு 7 மணிக்கு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே இருந்து என் மண், என் மக்கள் நடை பயணத்தை தொடங்கினார். பின்னர் அவர் சொக்கர் கோவிலை அடைந்தார். அப்போது அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

இந்த நடைபயணம் சரித்திர வெற்றி பெற்றுள்ளது. அதற்கு பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடைபயணத்தில் வந்தவர்கள் எல்லோரும் கதாநாயகர்கள் தான். நீங்கள் தமிழகத்துக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறீர்கள். சனாதனம் வேண்டாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

9 ஆண்டு கால நல்லாட்சி

இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ராஜபாளையம் ரெயில் நிலையமும் ஒன்று. ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தனிநபர் கடனாக ரூ.1 கோடியே 4 லட்சத்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. 9 ஆண்டு காலம் நல்லாட்சி நடக்கிறது.

மோடியை ஊழல்வாதி என்று சொன்னால் அவர்கள் தடம் இல்லாமல் அழிந்து போவார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வரலாறு காணாத தோல்வியை மக்கள் கொடுக்க வேண்டும். தமிழகத்துக்கு 10 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் 13 பக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளேன். இதை பொய் என்று நிரூபித்தால் பா.ஜ.க மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி விடுகிறேன்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

நல்லவர்கள் எல்லாம் ஒரே நாடு ஒரே தேர்தலை விரும்புகிறார்கள். 5 ஆண்டுகளில் ஒரு அரசு அதிகாரி 1½ ஆண்டுகள் தேர்தல் வேலை செய்ய வேண்டி உள்ளது. இதை மாற்றத்தான் பிரதமர் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என நினைக்கிறார். தேர்தல் எப்போது நடந்தாலும் தி.மு.க மண்ணை கவ்வும். ராஜபாளையத்தில் அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளது. இரவு 10 மணி ஆகிவிட்டது. இதோடு பேச்சை நிறுத்திக் கொள்கிறேன். இல்லையென்றால் என் மீது போலீசார் வழக்கு போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், காவல்துறை மீது எனக்கு மரியாதை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்