சோலாரில் தற்காலிகமாக அமைய உள்ள பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சோலாரில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் இந்த தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், வெள்ளகோவில் மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்க அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வரவதற்கும் இடையில் தற்காலிக தடுப்புசுவர் அமைக்கவும், போக்குவரத்து போலீசாருக்கான கண்காணிப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் மதுரம், மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சரவணன், தமிழ்நாடு போக்குவரத்து கழக இயக்க மேலாளர் பழனிச்சாமி, தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கே.எஸ்.பழனிச்சாமி, செயலாளர் விவேகானந்தன் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.