தென் இந்தியாவின் சிகிச்சை மையமாக அமைக்கப்படும்: "மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளைவிட மதுரை எய்ம்ஸ் முற்றிலும் மாறுபட்டது"- பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

“மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளைவிட மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை முற்றிலும் மாறுபட்டது” என அண்ணாமலை பேசினார்.

Update: 2023-08-05 21:04 GMT


"மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளைவிட மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை முற்றிலும் மாறுபட்டது" என அண்ணாமலை பேசினார்.

மதுரையில் பாதயாத்திரை

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண்-என் மக்கள்' பாதயாத்திரை மதுரை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடந்தது.

இதையொட்டி மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட யோகநரசிங்க பெருமாள் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை நடைபயணம் தொடங்கினார். பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து நரசிங்கம் சாலை வழியாக தொண்டர்களுடன் நடந்து வந்த அவர், ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் பேசியதாவது:-

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போல் மதுரை கிழக்கு தொகுதியை எடுத்துக் கொள்ளலாம். கிழக்கு தொகுதியில் நடப்பது போல் தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளிலும் ஊழல் நடக்கிறது.

அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே கிடையாது. பத்திரப்பதிவு துறையில் இடமாற்றத்திற்கு ஒரு லஞ்சம், அதனை நிறுத்தி வைப்பதற்கு லஞ்சம் என அவர் சார்ந்துள்ள துறையில் செய்யாத ஊழலே கிடையாது. விஞ்ஞான முறையிலும் ஊழல் செய்து வருகிறார்.

என் மகன்-என் பேரன்

1963-ம் ஆண்டு காமராஜர் தொடங்கி வைத்த அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இதனை திறப்பதற்கு அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட எந்த தி.மு.க.வினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க.வில் தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என ஆட்சி நடத்துகிறார்கள்.

பா.ஜனதா நடத்தும் இந்த பாதயாத்திரைக்கு 'என் மண், என் மக்கள்' என பெயரிட்டப்பட்டு உள்ளது. ஆனால் தி.மு.க.வினர் இது போல் பாதயாத்திரை நடத்தி இருந்தால் "என் மகன்-என் பேரன்" என பெயர் வைத்து இருப்பார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை

தமிழகத்திற்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் நலத்திட்டங்கள் வந்துள்ளன. சாதாரண மக்களுக்கும் இன்சூரன்ஸ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி வைத்தவர், மோடி.

2 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் முத்ரா கடன் தமிழகத்திற்கு வந்துள்ளது. இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்.

பிரதமர் மோடி, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தார். இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ்களை காட்டிலும் மதுரை எய்ம்ஸ் முற்றிலும் மாறுபட்டது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் விரிவாக்கம் ஆகும்.. ஆனால், தென் இந்தியாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மையமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது.

மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ரூ.600, ரூ.700 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பபடும். இந்த மருத்துவமனை வந்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தென் இந்தியாவின் முக்கிய சிகிச்சை மையமாக விளங்கும் வகையில் அமைக்கப்படும்.

1967 முதல் 5 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தும், மத்தியிலும் பலமுறை கூட்டணி ஆட்சியில் இருந்தும் தி.மு.க. ஏன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. மோடி அறிவித்த பின்னர், தற்போது அதை குறை கூறி வருகிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 27 மாதங்களில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக மதுரை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். கொள்ளை அடித்த பணத்தில் ரூ.2 ஆயிரம் கோடியை எய்மஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கொடுத்தால் என்ன?. வேகமாக கட்டி முடிக்கலாம்.

அது போல் சர்க்கரை ஆலையை திறக்க முடியாத நிலையில் பல கோடி செலவு செய்து கலைஞர் நூலகம் கட்டியது எதற்காக? ஊழல் செய்வதற்காகவே ரூ.87 கோடியில் பேனா சிலை தேவைப்படுகிறது. இதுதான் திராவிட மாடல் அரசியலா?

அரசு ஆஸ்பத்திரி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2000 செவிலியர்கள் இருந்தால் மட்டுமே பணியை சிறப்பாக செய்ய முடியும் ஆனால் 670 செவிலியர்கள் மட்டுமே இருக்கின்றனர். கிட்டத்தட்ட 1300 செவிலியர்கள் பற்றாக்குறை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க வேலை வழங்கக்கோரி செவிலியர்கள் சென்னையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுபோல் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் சென்னையில் ஆசிரியர்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எல்லாம் பணி ெகாடுக்க அரசுக்கு மனம் இல்லை.

வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வினர் கூறினார்கள். ஆனால் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

விவேகானந்தர் சிலைக்கு மரியாதை

இதனைதொடர்ந்து அண்ணாமலை, மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆத்திக்குளம் ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்.

விசாலாட்சி நகர், உழவர் சந்தை, பீ.பி.குளம் வழியாக செல்லூர் வந்தடைந்தார். முன்னதாக, உழவர் சந்தையில் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், செல்லூர் 50 அடி சாலையில் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மோடியை எதிர்க்கின்றன. ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என தெரியாது. அந்த கூட்டணியில் குழப்பம் உள்ளது. ஆனால், பா.ஜனதா கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமராக வருவார்". என்றார்.

அண்ணாமலையை அடுத்த  எம்.ஜி.ஆர். என்று அழைத்த மூதாட்டி

சோழவந்தான்

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்பகுதியில் முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்த பார்வதி அம்மாள்(வயது 70), அண்ணாமலையை பார்க்க வேண்டும் என்று தனது மகன் முத்துப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் ஊத்துக்குளி கிராமத்திற்கு வந்தனர். அங்குள்ள உறவினர் வீட்டு முன்பு அண்ணாமலை நடைபயணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அண்ணாமலை வந்தபோது, இங்குள்ள எனது உறவினர் வீட்டுக்கு வர வேண்டும் என்று பார்வதி அம்மாள் அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று அவரது உறவினர் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார். அங்கு அண்ணாமலையிடம் அவர் "உன்னைய பார்த்துவிட்டேன். எம்.ஜி.ஆரை தொடணும்ன்னு நினைச்சேன். நடக்கவில்லை. அடுத்த எம்.ஜி.ஆரை தொட்டுட்டேன். உன்னைய புரட்சி தலைவர்ன்னு சொல்லணும்" என்று கூறினார்.

உடனே அண்ணாமலை, "எம்.ஜி.ஆரின் கால் நகத்துக்கு நான் சமம் இல்லை. நான் ஒரு விவசாயி. தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று கூறினார். இந்த நிகழ்வு ருசிகரத்தை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமான வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்