பெண் ரெயில்வே ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் ஒருவர் கைது
செங்கோட்டையில் ஓய்வு பெற்ற பெண் ரெயில்வே ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் ஓய்வு பெற்ற பெண் ரெயில்வே ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெண் ரெயில்வே ஊழியர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரம் ரெயில் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் புஷ்பத்தாய் (வயது 73). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான இவர், தனது சகோதரி ராணி குடும்பத்தினருடன் சேர்ந்து விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி பகல் 12.30 மணி அளவில் புஷ்பத்தாய் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, 2 மர்மநபர்கள் புஷ்பத்தாயின் வீட்டு கதவைத் தட்டி தாங்கள் மழையில் நனைந்து விட்டதாகவும், டவல் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டுள்ளனர்.
உடனே, புஷ்பத்தாய் டவல் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது, பின்னால் சென்ற 2 நபர்களும் புஷ்பத்தாயின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
162 கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். சுமார் 162 கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்ய போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் புஷ்பத்தாய் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் தென்காசி பகுதியில் உள்ள ஒரு கடையில் முககவசம் வாங்கியுள்ளனர்.
கைது
இதையடுத்து அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் முத்துராமனை கைது செய்தனர். அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், முத்துராமனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய மேட்டூர் பகுதியைச் விஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.