தாளவாடி அருகே கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்த முடிவு
ரேடியோ காலர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து அடிக்கடி ஒற்றை யானை வெளியேறி திகனாரை, கரளவாடி, மல்லன்குழி, ஜோராக்காடு பகுதியில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. கருப்பன் என்று பெயரிடப்பட்ட இந்த யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றுவிட்டது.
இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் ஜோராக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள். கும்கிகளின் துணையுடன் கருப்பன் யானையை கட்டுப்படுத்தினால், அதற்கு மயக்க ஊசி போட்டு ரேடியோ காலர் பொருத்தப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.