டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்

6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Update: 2024-03-08 20:26 GMT

சென்னை,

குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி வெளியிட்டது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. நடத்தக்கூடிய தேர்வுகளில் அதிகமானோர் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வாக குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கும் தேர்வர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர்.

விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்த நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த மாதம் 28-ந் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது. அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி நடக்க இருக்கிறது.

இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியான 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Tags:    

மேலும் செய்திகள்