வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பீகார், ஜார்கண்ட் குழு தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை; கோவை, திருப்பூரிலும் நேரில் ஆய்வு

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தகவல் பரவிய விவகாரத்தில் பீகார், ஜார்கண்ட் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.;

Update:2023-03-05 02:41 IST

ஜார்கண்ட் குழு வருகை

பீகார், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டதாக வீடியோ காட்சிகளும், செய்திகளும் பரவின. இந்த விவகாரம் 2 மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆனால் இந்த வீடியோக்கள் போலியானவை என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் அந்த மாநில அரசுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை குழுவாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தன. இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு நிலவும் பிரச்சினை என்ன? என்பதை ஆராய்ந்து அறிக்கை தரும்படி உத்தரவிட்டன.

இந்தநிலையில், நேற்று காலை ஜார்கண்டில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினர் சென்னைக்கு வந்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்தை அவர்கள் சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அவர்கள் தாக்கப்படவில்லை என்றும் அதுல் ஆனந்த் விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் தமிழக அரசு கொடுத்த தகவல்களை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைந்தனர்.

டி.ஜி.பி.யுடன் பீகார் குழு சந்திப்பு

இதற்கிடையே, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை, தலைமைச்செயலகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை பீகாரில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்னை வந்தனர். பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் அந்த குழுவுக்கு தலைமை தாங்கினார். இவருடன் நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் கமிஷனர் அலோக் குமார், சிறப்பு பணி படை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் ஆகியோர் நேற்று இரவு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இதன் பின்னர், சென்னை கலெக்டர் அலுவலகம் புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் அமிர்த ஜோதி வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இரவு நடந்தது. இந்த கூட்டத்துக்கு, அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் வடமாநில தொழிலாளர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கோவை, திருப்பூர் பயணம்

தமிழகம் வந்துள்ள பீகார் குழுவினர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர். ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றுப்பயண விவரம் இன்னும் வெளியாகவில்லை.

சங்கப்பிரதிநிதிகள் கூட்டம்

முன்னதாக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பிரச்சினை தொடர்பாக வருவாய்த்துறை, நுண்ணறிவு பிரிவு, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பீகார் அதிகாரிகள் 3 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்து, இதுபற்றி பலருடன் கலந்துரையாட உள்ளனர்.

இந்த விஷயத்தில், பீகார் முதல்-மந்திரியும், தமிழக முதல்-அமைச்சரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்