கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிப்பு; தமிழ்நாட்டுக்கு உடனடியாக 90 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை
கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கு உடனடியாக 90 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் கோமாரி நோய்த்தடுப்பூசி 100 சதவீத மானியத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆண்டுதோறும் இருமுறை கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சமீபகாலமாக தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோமாரி நோய் தடுப்பூசி தொடர்பாக மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மந்திரி பர்சோத்தம் ரூபாலாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
94 லட்சம் கால்நடைகள்
தமிழகத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசியின் தேவை மிக அவசரமாக உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நோய்வாய்ப்படக்கூடிய கால்நடை மந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும், கோமாரி நோய் வரவிடாமல் தடுக்கவும் காலத்தின் கட்டாயமாக தடுப்பூசிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியும்.
கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம். 2011-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் கால்நடைகளுக்கு மாநில அரசு தடுப்பூசிகளை செலுத்தி வந்தது. தமிழகத்தில் இந்த தடுப்பூசிகள் சுமார் 94 லட்சம் கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.
நிலுவை
தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தொடர்பான தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கியதன் அடிப்படையில், 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் 87.03 லட்சம் கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளுக்கு செலுத்தப்பட்டன.
கடந்த முறை 2021-ம் ஆண்டு செப்டம்பரில் தடுப்பூசி அளிக்கப்பட்ட போதும், தடுப்பூசி வினியோகத்தில் குறைபாடு இருந்தது. இதுபோன்ற குறைபாடுடன் கூடிய வினியோகத்தினால் தடுப்பூசி செலுத்தி முடிக்க 6 மாதங்கள் ஆகின்றன.
அடுத்த கட்டமாக கடந்த செப்டம்பரில் வழங்க வேண்டிய தடுப்பூசி இன்னும் நிலுவையில் உள்ளது. தமிழகத்திற்கு ஒரே தவணையில் 90 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே மத்திய அரசை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவற்றை பெறுவதற்கு இன்னும் காத்துக்கொண்டிருக்கிறோம்.
உடனே வழங்குங்கள்
எனவே நீங்கள் இதில் தலையிட்டு, கோமாரி நோய்க்கான தடுப்பூசிகள் உடனடியாக தமிழகத்திற்கு அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் கோமாரி நோய் பரவாமல் தடுக்கவும், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு நேரிடாமல் தவிர்க்கவும் முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.