திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்

கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது.

Update: 2023-06-07 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் நடத்த அரசு ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கான முதற்கட்ட பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் இந்த கோவிலில் அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், விமானம் கலாகர்ஷணம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

நேற்று காலை 7 மணி முதல் 2-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் சிவகாமி- அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சலனம் செய்து பாலஸ்தாபனம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் (நகைகள் சரிபார்ப்பு) வெங்கடேஷ், செயல் அலுவலர் ஆர்.முருகன், ஆய்வாளர் சேதுராமன், அர்ச்சகர்கள் ஆனந்தன், கிரிகுமார், ராமசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோவிலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்