திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் திட்ட பணிகள் தொடர்பான செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.;
திடீர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஆத்துப்பாக்கம் ஊராட்சி. இங்கு பட்டியலினத்தை சேர்ந்த அமிர்தம் என்கிற பெண், ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் கடந்த 14-ந் தேதி தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்து பல்வேறு திட்ட பணிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திட்ட பணிகள்
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 1 மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பல்வேறு திட்ட பணிகளுக்கான செயல்பாடுகள் என்ன? அவை தற்போது எந்த அளவில் உள்ளது? இன்னும் முடிக்கப்படாத பணிகள் எவை? போன்றவற்றை வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், திட்ட பணிகள் தொடர்பாக இடங்களையும் அவர் நேரில் ஆய்வு செய்து அங்கு உள்ள இடர்பாடுகள் என்ன? அவற்றை எளிதில் முடித்திடும் வகையில் அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆலோசனை வழங்கினார்.
பணி ஆணைகள்
முன்னதாக ரூ.5 லட்சம் செலவில் போடை தெருவில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மற்றும் குழாய்கள் அமைத்தல், ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், ரூ.6 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி பெண் குழந்தைகளுக்கான கழிப்பறை கட்டுதல் உள்பட பல்வேறு திட்ட பணிகளுக்கான பணி ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்திடம் வழங்கினார்.