திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் -கூடுதலாக 2 நிறுத்தங்களில் நின்று செல்லும்

திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது. கூடுதலாக 2 நிறுத்தங்களில் நின்று செல்லும்.

Update: 2023-08-08 21:09 GMT


வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு இருமார்க்கங்களிலும் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06020) திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 23-ந் தேதி, 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதிகளில் புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில், இந்த சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06019) வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 24-ந் தேதி, 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந் தேதிகளில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரத்தில இருந்து மாலை 3.25 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

ரெயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு எகனாமி வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயில்கள் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரெயில்கள் இயக்கப்படுவதற்கு முன்னரே மேலும் 2 ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில்கள் கூடுதலாக பாறசாலை மற்றும் நாங்குநேரி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்