திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.;
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 5-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் திருப்பல்லக்கு மற்றும் வெண்ணெய்தாழி உற்சவமும், வேடுபரி உற்சவமும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி அளவில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்ததும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோபுர வாசலில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோவில் கட்டியதில் இருந்து இதுவரை தேரோட்டம் நடந்ததில்லை. தற்போது தான் முதல் முறையாக கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.