மணியம்பாடிவெங்கட்ரமண சாமி கோவிலில் திருக்கல்யாம் உற்சவ விழாஏராளமான பக்தர்கள் தரிசனம்

Update: 2023-08-13 19:30 GMT

தர்மபுரி:

மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடியில் உள்ள வெங்கட்ரமண சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி மூலவருக்கு நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு பல்வேறு நறுமண பொருட்கள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி சீர்வரிசை அழைப்பும், சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும் நடைபெற்றது. பின்னர் வேத முறைப்படி வெங்கட்ரமண சாமிக்கு மாலை மாற்றியும், அம்மனுக்கு மாங்கல்யம் அணிந்தும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்களுடன் சிறப்பு உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடு மட்டும் மகா தீபாராதனையும் நடந்தது.

அன்னதானம்

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாலை சாமி திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்