திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.300 கோடியில் பணிகள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.300 கோடியில் நடைபெற உள்ள பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-29 00:02 GMT

சென்னை,

திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழ்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் "திருச்செந்தூர் முருகன் கோவிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, முழுமையான பணிகள் மற்றும் இதர பணிகள் பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. உபயதாரர் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவில் உட்கட்டமைப்பு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வு அறை ஏற்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ரூ.300 கோடியில்...

பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், கோவில் வளாகத்தில் சாலை வசதி ஏற்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில் நிதி மூலமாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான தங்கும் விடுதிகள், சலவைக் கூடம், சுகாதார வளாகம், பஸ் நிலையம், திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோவிலின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1951-ம் ஆண்டு முதல் இதுநாள் வரை இவ்வாறான மிகப்பெரிய கோவில் பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், எச்.சி.எல். நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் ஸ்ரீமதி சிவசங்கர், சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திருச்செந்தூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகையா, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி. செந்தில்ராஜ், திருச்செந்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், உறுப்பினர்கள் வி.செந்தில்முருகன், அனிதா குமரன், ந.ராமதாஸ், பா.கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்