விவசாய தொழிலாளர்கள்உழவன் செயலியில் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்
விவசாய தொழிலாளர்கள் உழவன் செயலியில் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.;
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு கிடைக்கும்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி செயல்பாட்டில் உள்ளது. இச்செயலியில் தமிழ்நாடு அரசு சார்பில் விவசாய கூலி தொழிலாளர்கள் விவரங்களை நேரடியாகவோ, முகவர் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக, திறன் ரீதியாக பதிவு செய்துகொள்ள ஒரு புதிய செயலி வேளாண் உழவர் நலத்துறையால் உருவாக்கப்பட்டு புதிய சேவையாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வேளாண் சேவை நிறுவனங்கள் மூலம் போதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் விவசாய பணிகளையும் உரிய நேரத்தில் விவசாயிகளால் மேற்கொள்ள முடியும்.
வேளாண் கூலி தொழிலாளர்கள் தங்களின் மாவட்டத்தைவிட்டு பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்வதை தவிர்த்து, உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் விவசாயிகள் விவசாயப் பணிகளை உரிய பருவத்தில் மேற்கொள்ளவும் இந்த செயலி பயன்படும்.
18 வயது நிரம்ப வேண்டும்
இதில் உரங்கள் இருப்பு நிலவரம், இடுபொருட்கள் முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், விதை இருப்பு, வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு பெறுதல், விளை பொருட்கள் சந்தை நிலவரம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் பரிந்துரை உள்ளிட்ட பலவித திட்டங்களை எளிதாக பார்க்கும் வசதி உள்ளது. இவற்றுள் இடுபொருட்கள் முன்பதிவு தளத்தில் உள்ளீடு செய்து சென்றால் விவசாய தொழிலாளர்கள் செயலி என தனி பக்கம் உள்ளது. அப்பக்கத்தில் தொழிலாளர்களின் 10 இலக்க செல்போன் எண் மற்றும் சுய விவரக் குறிப்பு பதிவிட வேண்டும். விவசாய பணிகளின் தன்மைக்கு ஏற்ப தனித்தனியாக கூலி கோரலாம்.
கூலி வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்த கூலி தொழிலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவசாய பணிகளுக்கு அழைத்துக்கொள்ள முடியும். இச்செயலியில் பதிவு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 60 வயது வரை மட்டும். இச்செயலி விவசாயிகளையும் தொழிலாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. இதன்மூலம் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பினை பெறலாம்.
இச்செயலியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலார்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் தங்கள் செல்போண் எண், ஆதார் எண் மற்றும் வங்கி புத்தக விவரங்களுடன் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு வட்டார அளவிலான வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.