அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்: நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய கள்ளழகர்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கள்ளழகர் கோவில் தைலக்காப்பு திருவிழாவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் நேற்று நீராடினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update:2023-10-27 01:51 IST

அழகர்கோவில்


தைலக்காப்பு உற்சவம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு திருவிழா ஆண்டுத்தோறும் ஐப்பசி மாதம் துவாதசி திதியில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 24-ந் தேதி தைலக்காப்பு உற்சவ விழா தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் மேட்டு கிருஷ்ணன் சன்னதியில் சீராப்பதிநாதன் சேவை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று 3-ம்நாள் திருவிழாவில் காலையில் அழகர்கோவில் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெருமாள் அலங்காரப் பல்லக்கில் எழுந்தருளி சகல பரிவாரங்களுடன் புறப்பட்டு சென்றார். அழகர்மலை, நூபுரகங்கை செல்லும் சாலையின் வழியில் உள்ள அனுமன் தீர்த்தம், கருட தீர்த்த எல்லைகளில் பல்லக்கு நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அங்கிருந்து அழகர் புறப்பாடாகி நூபுரகங்கைக்கு சென்றார்.. அங்குள்ள ராக்காயி அம்மன் கோவில் மாதவி மண்டபத்தில் எழுந்தருளினார். பெருமாளுக்கு பல்வேறு பூஜைகள், பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடைபெற்றன. இதைதொடர்ந்து பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது. அங்குள்ள தீர்த்த தொட்டியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நூபுரகங்கை தீர்த்தத்தில் திருமஞ்சனமாகி அழகர் நீராடினார். சடைமுடி அலங்காரம், தூபம், தீபம் காட்டுதல், சாமரம் வீசுதல், வெற்றிலை பாக்கு போடுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் அழகருக்கு நடந்தன

பக்தர்கள் தரிசனம்

பின்னர் அங்குள்ள மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக நூபுரகங்கை ராக்காயி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் மண்டபம் முழுவதும் பழங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கள்ளழகர் பெருமாள் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வந்த வழியாகவே பல்லக்கில் மலைப்பாதையில் வந்து, மாலையில் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர். இந்த திருவிழாவை காண சுற்றுவட்டாரம், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்து நூபுர கங்கையில் அழகரை தரிசனம் செய்தனர். அழகர் மலை உச்சிக்கு சென்று வருடம் ஒரு நாள் நூபுரகங்கையில் கள்ளழகர் நீராடுவது இந்த விழாவின் சிறப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்