கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குண்டர் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன?

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குண்டர் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-03-31 18:45 GMT

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குண்டர் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குண்டர் சட்ட வழக்கு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் ஒரு கொலை வழக்கில் கைதானவர்கள். இதில் கணேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து அவர்கள் இருவரும் அறிவுரை குழுமத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கணேஷ்குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவரது சகோதரர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தனர்.

இதையடுத்து தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கணேஷ்குமார் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களில் ஒருவரின் கோரிக்கையை ஏற்றும், மற்றொருவரை நிராகரித்தும் அறிவுரைக்குழுமம் உத்தரவிட்டு இருப்பது ஏற்புடையதல்ல. அறிவுரைக்குழுமம் முறையாக செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காக கோர்ட்டுக்கு உதவும் வகையில் வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர். மற்ற வக்கீல்களும் இதுசம்பந்தமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கூறியிருந்தது.

எத்தனை வழக்குகள்?

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், குண்டர் சட்ட நடவடிக்கை குறித்த மனுக்களை விசாரிக்கும் மாநில அறிவுரை குழுமம் அரசுக்கு அறிக்கை அனுப்பும்போது அனைத்து ஆவணங்களையும் அனுப்ப வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அறிக்கை மற்றும் கருத்து மட்டுமே அனுப்பிவிட்டு, ஆவணங்களை அனுப்பவில்லை. இதில் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்புகிறோம்.

மனுதாரர் வழக்கு உள்பட 27 குண்டர் சட்ட உத்தரவுகள் தொடர்பாக அரசுக்கு கடந்த ஜூலை மாதம் அறிவுரை குழுமத் தலைவர் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த 27 வழக்குகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன?. இதில் எத்தனை வழக்குகளில் அறிவுரை குழுமத்தின் கருத்து பெறப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவு உறுதி செய்யப்பட்டது? ரத்தானது எத்தனை? ஆகிய விவரங்களை அரசு தரப்பில் வருகிற 12-ந் தேதி தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்