கூட்டுறவு கடன் சங்கம் மூலம்கால்நடை பராமரிப்பு கடன் வழங்க வேண்டும்:கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கால்நடை பராமரிப்பு கடன் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
எட்டயபுரம் அருகே உள்ள உருளைக்குடி பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கால்நடை பராமரிப்பு கடன் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி 4 வட்டாரங்களை சேர்ந்த 89 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.51 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 334 மனுக்கள் பெறப்பட்டன. இதே போன்று மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் எட்டயபுரம் தாலுகா உருளைக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்துக்கு உட்பட்ட வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் கால்நடை பராமரிப்பு கடன் கோரி 80-க்கும் மேற்பட்டோர் கடந்த 20.4.2023-ல் விண்ணப்பித்தோம். எங்களுக்கு கடன் வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே, கலெக்டர் நேரடியாக தலையிட்டு எங்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன் விரைவாக வழங்கவும், காலம் தாழ்த்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆசிரியைகள் கோரிக்கை
ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியைகள் சிலர் கொடுத்த மனுவில், ஆதவா தொண்டு நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக கடந்த நான்கரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். சில தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் சில ஆசிரியைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலெக்டர் தலையிட்டு சிறிது கால அவகாசம் அளித்து, தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை நடத்தவும், எங்களது வாழ்வாதாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நடவடிக்கை
ஓட்டப்பிடாரம் யூனியன் கொத்தாளி பஞ்சாயத்து தலைவர் மாசானமுத்து தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக நான் பரிந்துரை செய்த மூன்று பெண்களில் ஒருவரை நியமிக்க அதிகாரி மறுத்து, பணம் கேட்டு வருகிறார். இதில் கலெக்டர் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.