கிராமங்களுக்கும் மும்முனை மின்சார வசதி

சிவகாசி பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கி தி.மு.க. அரசு சாதனை படைத்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் கூறினார்.

Update: 2022-12-09 19:35 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கி தி.மு.க. அரசு சாதனை படைத்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் கூறினார்.

மும்முனை மின்சாரம்

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாரணாபுரம் பகுதியில் போதிய மின்சார வசதி இல்லாத காரணத்தால் பலர் இந்த கிராமத்தில் போதிய இடவசதி இருந்தும் தொழில்கள் தொடங்க முன்வராத நிலை இருந்தது. இதை தொடர்ந்து இந்த பஞ்சாயத்து தலைவர் தேவராஜன், நாரணாபுரம் பகுதிக்கு மும்முனை மின்சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அசோகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்.

இதை தொடர்ந்து எம்.எல்.ஏ. அசோகன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தற்போது நாரணாபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைத்துள்ளது.

தொடக்கவிழா

இதன் தொடக்க விழா நேற்று நாரணாபுரத்தில் நடைபெற்றது. இதில் அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜன், மின் வாரிய அதிகாரி பாவநாசம், தி.மு.க. பிரமுகர்கள் கோபிகண்ணன், கண்ணன், காங்கிரஸ் பிரமுகர்கள் ஜி.பி.முருகன், சேர்மதுரை, பைபாஸ் வைரகுமார் மற்றும் நாரணாபுரம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரசின் சாதனை

பின்னர் அசோகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்பகுதி மக்களின் கோரிக்கையை அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். உடனே கைமேல் பலன் கிடைத்துள்ளது. தி.மு.க. அரசின் சாதனையில் இதுவும் ஒன்று. இனி இந்த பகுதியில் தொழில்கள் மிகவேகமாக வளர்ச்சி பெறும். சிவகாசி சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.

அதன் பின்னர் தான் திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலப்பணி தொடங்கும். வணிகர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திருத்தங்கல் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இறுதி முடிவு மத்திய அரசு தான் எடுக்கும். சேதம் அடைந்து காணப்படும் ரதவீதி சாலைகள் விரைவில் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்